Please visit
www.godshavespoken.blogspot.com.
This blog will be continued there henceforth.
:)
"உனக்கு பிடித்த திருக்குறள் எதுடா?" என்கிறாய், அதிகாலை டி.வி குறள் கேட்டு விட்டு. "நான் இன்னும் அதை படிக்கவில்லை" என்றேன். "அப்படியா? அப்புறம் அது பிடிக்கும்னு எப்படி தெரியும்?" என்று பதில் கேள்வி தொடுக்கிறாய். "தெரியவில்லை. எப்பொழுது படிக்க அனுமதிப்பாய்... உன் இரு வரி உதடுகளை?".
"நமக்கு ரசனை வேறுமாதிரிடா" என்றாய் ஒரு நாள். "அப்படியா? உனக்கு என்ன பிடிக்கும்?" என்றேன். "எனக்கு உன்னை பிடிக்கும்" என்றாய் கொஞ்சலாய். "எனக்கும் உன்னை பிடிக்கும்... பார் ஒரே மாதிரி தான் இருக்குது நமது ரசனை" என்றதும் வந்த உன் செல்ல கோபமும் எனக்கு பிடிக்குமடி.
"சரி சரி.. உனக்கு நீளமான கதைகள் பிடிக்கும். எனக்கு ஒரு பக்கம் தாண்டினால் கண்ணை கட்டும். உனக்கு ஆங்கில ம்யூசிக் ஆல்பங்கள் பிடிக்கும். எனக்கும் தமிழை தாண்டாது ரசனை.
உனக்கு கறுப்பு பிடிக்கும். எனக்கு சிகப்பு பிடிக்கும்.. அப்படித்தானே" என்றதும் உம் கொட்டினாய்.. "அதே மாதிரி.. உனக்கு என்னை பிடிக்கும். எனக்கு என்னை விட உன்னை தான் பிடிக்கும்.. ஆக நம் ரசனை ஒரே மாதிரி இல்லாமல் இருப்பது நல்லது தானே?" என்றதும் ஒரு சில வினாடி புரியாமல் விழித்தாயே.. அந்த விழிகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
"உன் கைவிரல்களை முதன்முதலில் என்னோடு கோர்த்துகொண்டது நியாபகம் இருக்கா?" என்று கேட்டதும், "ஏன்?" என்கிறாய். "ஹ்ம்ம்.. காதல் என் மேல் ஏறி சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்ட நாளடி அது.." என்றதும், "ஹையே..." என பழிச்சு காட்டும் உன் குழந்தைதனம் எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?
"உன் கருவிழிச்சிறையில் இருப்பவனுக்கு இதழ்ச்சாவி எப்பொழுது?" கேட்டால் படும் வெட்கத்தை மொழி பெயர்த்து கொஞ்சம் சொல்லேன்..
எப்பொழுதும்
அணிந்து கொள்கிறாயே..
எப்பொழுது
அவிழ்க்க போகிறாய்..
உன் வெட்கங்களை?காதல் அஹிம்சை
எவன் சொன்னான்?
உன் விழிச்சிறையில்
அடிபட்டு கிடக்கும்
என் இதயத்தை
கேட்டுப்பார்..
எனக்காக கொஞ்சம்
மாற்றிக்கொள்...
உன் விழிகளை
சைவத்திற்கும்..
உன் இதழ்களை
அசைவத்திற்கும்..
எத்தனை நேரம்
பேசிக்கொண்டாலும்
பிரியும் நேரம்
உன் விழிகள்
பேசும் மௌனத்தில்
படர்ந்து இருக்கும்
நம் காதல்.
உன்னை முதன்முதலில் சந்தித்ததொரு தினம் இன்னும் நியாபகம் இருக்கின்றது. இரட்டை ஜடையில் நீ. உன் கூந்தலில் சிக்கிய எனது காகித ராக்கெட். "ஹேய் என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? உனக்கு என்ன அப்துல் கலாம்னு நினைப்பா?" கோபமாய் சண்டையிட வந்தாய். "உன்னை. இல்லை" என்றேன்.
புது தோடு அணிந்து வந்த நாள், "ஹேய்.. ஜிமிக்கி புதுசா.. எங்க காமி". "மாட்டேன்..போடா" மறுத்தவள் நீ. "ஹையே.. அழகா இருக்குனு தான காமிக்க சொல்லறேன்" நான் கெஞ்ச... பிறகு தான் காண்பித்தாய். ஹ்ம்ம்.. ஜிமிக்கி கிடக்கட்டும். நீ எவ்வளவு அழகு தெரியுமா?
"உனக்கு ஒன்னு தெரியுமா? தேவதைகள் வெள்ளை கவுனில் வரும் என சொன்னவன் முட்டாள். உன் தாவணி கவுனும் இல்லை. வெள்ளையும் இல்லை" நான் சொல்ல, "உனக்கு பைத்தியம்" என்கிறாய் நீ. "ஆமாம்.. அதுக்கு தான தேவதையை வணங்க வந்திருக்கேன். கொஞ்சும் வரம் கொடேன்?".
எவ்வளவு அழகாய் வெட்கப்படுகின்றாய். உன் கைகளை என் கைகளில் சிறைபிடித்த முதல் நாள்.. "வேண்டாம்ப்பா.. ப்ளீஸ்..". உன் கைகளின் ஒரு நொடி சிறையே தாங்க முடியவில்லையே உனக்கு.. உன்னை கண்டது முதல் உன் விழிச்சிறையில் சிக்கி இருக்கும் என் இதயம் மட்டும்? ஆனாலும் என் இதயம் என்னை விட கொடுத்து வைத்தது தான். உன் இமைச்சாமரம் ஆவது கிடைக்கின்றது.
நீ என் தோள்களில் சாய்ந்த அந்த மாலை பொழுது, என் வாழ்க்கையே அழகாய் போனது. "இப்படியே செத்துடனும் போல இருக்குடா..." என்கிறாய் நீ. எனக்கோ இப்படியே வாழ்ந்திடனும் போல இருக்குதடி. உன்னை விட அழகான பெண்ணொருத்தியை வரம் கொடு தேவதையே.. உனக்கும் எனக்கும் மகளாய்.
யார்யாரோ
கவிதை எழுதிய
நிலவு கூட
அழகாய் போனதடி..
நீ அருகில்
இருக்கையில்..
எத்தனையோ
பெண் பார்த்து
வந்திடாத கனவுகளை
மொத்தமாய் கொண்டுவர
நின்னை
செய்தானோ மன்மதன்?
அழகாய்தானடி
இருக்கிறாய்..
எனக்கு பிடித்த
உடையில்..
உனக்கு பிடித்த
வெட்கத்தில்..
நமக்கு பிடித்த
காதலில்..
நீ.
என்னை
தேடி வதைக்கும்
தேவதைகளில்
நீ என் காதலி.
பி.கு: நான் கிறிஸ்துமஸ் லீவில் செல்வதால், இப்பதிவுக்கான மறுமொழி பதில்களையும், உங்கள் பதிவுகளையும், திரும்ப வந்து தான் பார்க்க இயலும். Happy Christmas.
ஒரு நாள் திடீரென "ஹேய்.. உனக்கு ஜோசியம் பார்க்க தெரியுமா?" என்றாய். "ஏன்?" என்று கேட்டேன். "உன் கையை காமி" என்றாய். அன்பான மனைவி, இரு குழந்தைகள், வசதியான வாழ்க்கை என்று ஜோசியம் சொல்ல ஆரம்பித்தாய். "நான் பார்க்கட்டுமா?" என்றேன். "உம்ம்" என்றவளாய் உன் கை நீட்டினாய். "ஹையே என்ன கை நீட்டுற.. நாங்க இதழ் ரேகை மட்டும் தான் பார்ப்போம்" என்றேன். உன் வெட்க சிரிப்பில் கூடவா தெரியவில்லை.. என் வாழ்க்கையை சொல்ல வேண்டிய கை எனதல்ல உனது என்று..
நீ தினமும் கோவிலுக்கு வரும் நேரம், நான் காத்திருப்பேன் என தெரியும். அருகில் வந்ததுமே, உன் தோழிகளின் கிண்டல் சிரிப்புகள் என் காதிலும் விழும். "டேய்.. ரொம்ப கிண்டல் செய்றாங்கடா.." என்று தனியாக இருக்கும் பொழுது செல்லமாய் கோபிப்பாய் நீ.
உனக்கு சொல்லியதில்லை. "இருபது வருடங்களாய் தானாக வராதவனை இப்பொழுது தானே வரவழைத்தேன் பார்த்தாயா" என என் மனதில் நக்கல் செய்யும் கடவுள்களை..
"சரி.. அப்படினா நாளைக்கு வரலை" என்பேன் நான். சட்டென்று வரும் பதிலை நிறுத்தி கொண்டு, சரி என்பாய். மறுநாள் நான் மறைந்திருந்து உன் விழித்தேடலை ரசிக்க ஆரம்பிப்பேன். "இந்த முறை நிஜமாவே வரலை போல" என உன் விழியில் ஏமாற்றம் பிறக்கும். அதற்கு மேலும் மறைந்து நிற்க முடியாதவனாய் என்னை காட்டி கொள்வேன்.
பின் சந்திக்கும் பொழுது, உன் உதடுகளில் பொய் கோபத்துடன், "வரமாட்டேன்னு சொல்லிட்டு ஏன் வந்தாய்?" என்பாய். "சரி அப்ப நாளைக்கு நிஜமாவே வரலை" என்றதும் வேகமாக "ச்சும்... பரவாயில்லை வந்துக்கோ" என்பாய். சொல்லாமல் ஜெயித்து விட்டதாய் உன் விழியில் தோன்றும் அந்த மகிழ்ச்சிக்கு ஆயிரம் முறை உன்னிடம் தோற்கவும் தயாராயிருக்கின்றேன் நான் என அறிவாயா?
நீ வரும் வரை
விட்டு விட்டு
எரிந்து இருக்கும்
தெரு விளக்கும்
நீ கடந்து
செல்கையில்
குட்டிச் சூரியனாய்..நீ போடும் கோலம்
காண உதிக்கும்
அதிகாலை சூரியனும்
பகலெல்லாம்
உன்னை கண்ட
மயக்கத்தில்
மாலை பொழுதும்.. ஒரு முறையேனும்
உன்னை விட
அழகாய் இருப்போமென
மெல்ல மெல்ல வரும்
பௌர்ணமி முழுநிலவும்..
தோல்வி வெட்கத்தில்
தேய்பிறையும்..உன் இமைச்சாமரம்
வீசும் தென்றலுக்கு தான்
உன் விழிச்சிறையில்
வந்து சிக்கியவன் நான்..நீ கொடுத்து போகும்
ஆயிரம் கனவுகளும்
பறித்து போகும்
இரவு தூக்கங்களும்..
வரமும் அளித்து
சாபமும் தரும்
வேதங்களில்
இது காதல் தான்..
முதல் முறையாய் உன்னை அன்று தான் பார்த்தேன். "அழகானதொரு தேவதை பாரடா" என்றான் நண்பன். நான் ஆத்திகன் ஆனது அன்று தான்.
வகுப்பறையில் வாத்தியார் உன்னை எழுந்து நின்று பேச சொல்கையில்,எனக்கு கால் வலிக்க தொடங்கியது. பின்னொரு நாளில் இதை சொல்கையில் நீ சிரித்தாய். "பொய் சொல்லாதே" என்றாய். "ஆமாம். எனக்கு வாயும் வலித்தது" உண்மையை ஒப்புக்கொண்டேன் நான்.
முதல் முறையாக நீ என்னிடம் பேசிய நாள் இன்னும் என் குறிப்பேட்டில் வட்டமிட்டபடி இருக்கின்றது. காதல் என்னிடம் பேச தொடங்கிய நாள்.
நான் உன்னை விரும்புகின்றேன் என்று உன்னிடம் சொன்னதும் நீ அழ தொடங்கினாய். நான் உன் கண்ணீர்துளிகள் தரையை தொடாதபடி தாங்க தொடங்கினேன்.உன் வலிகளை வாங்கிக்கொண்டு என் சிரிப்புகளை பகிர்ந்து கொள்வது காதல் தானடி.
"ஒரு முத்தம் கொடேன்" என்றேன் நான். "ச்சீ போ..மாட்டேன்" செல்லமாய் நீ.
"சரி இரண்டாய் கொடேன்.." நான் கெஞ்ச, என் புகை படத்திற்கு முத்தம் கொடுத்து விட்டு சென்றாய். பொறாமையும் கோபமும் ஒரு புகைபடம் மேலே கூட வரும் என அன்று தான் உணர்ந்தேன்.
நான் சொல்லும் யாவற்றையும் உம் கொட்டி கேட்கின்றாய். என்றாவது தெரியுமா உனக்கு? இது கதையல்ல காதல் என்று..
பொம்மை கேட்டு
அழும் குழந்தை
போல
உன்னை கேட்டு
அடம் பிடிக்குது
என் மனம்
அழும் குழந்தையை
கிள்ளுவதாக
உன் கூந்தலை
கலைந்து செல்கின்றது
காற்று..வடம் பிடித்து
தேரிழுத்து
வணங்க சொல்வது
கடவுள்..
உன் கை பிடித்து
உடனிழுத்து
நெருங்க சொல்வது
காதல்..என் காதலை விட
அழகானவள் நீ..
என் கவிதைகளில் எல்லாம்
கருத்தானவள் நீ..உன் வெட்கங்களை எல்லாம்
அனைக்க பார்க்கிறது
என் தேடல்..
என் தேடல்களை எல்லாம்
தடுக்க பார்க்கிறது
உன் வெட்கம்..வரிகள் எழுதி
கவிஞனாகும் ஆசையில்லை..
விழிகள் படித்து
கவிஞனாகும் வரம்
மட்டும் வேண்டும்..