உன்னை முதன்முதலில் சந்தித்ததொரு தினம் இன்னும் நியாபகம் இருக்கின்றது. இரட்டை ஜடையில் நீ. உன் கூந்தலில் சிக்கிய எனது காகித ராக்கெட். "ஹேய் என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? உனக்கு என்ன அப்துல் கலாம்னு நினைப்பா?" கோபமாய் சண்டையிட வந்தாய். "உன்னை. இல்லை" என்றேன்.

புது தோடு அணிந்து வந்த நாள், "ஹேய்.. ஜிமிக்கி புதுசா.. எங்க காமி". "மாட்டேன்..போடா" மறுத்தவள் நீ. "ஹையே.. அழகா இருக்குனு தான காமிக்க சொல்லறேன்" நான் கெஞ்ச... பிறகு தான் காண்பித்தாய். ஹ்ம்ம்.. ஜிமிக்கி கிடக்கட்டும். நீ எவ்வளவு அழகு தெரியுமா?

"உனக்கு ஒன்னு தெரியுமா? தேவதைகள் வெள்ளை கவுனில் வரும் என சொன்னவன் முட்டாள். உன் தாவணி கவுனும் இல்லை. வெள்ளையும் இல்லை" நான் சொல்ல, "உனக்கு பைத்தியம்" என்கிறாய் நீ. "ஆமாம்.. அதுக்கு தான தேவதையை வணங்க வந்திருக்கேன். கொஞ்சும் வரம் கொடேன்?".

எவ்வளவு அழகாய் வெட்கப்படுகின்றாய். உன் கைகளை என் கைகளில் சிறைபிடித்த முதல் நாள்.. "வேண்டாம்ப்பா.. ப்ளீஸ்..". உன் கைகளின் ஒரு நொடி சிறையே தாங்க முடியவில்லையே உனக்கு.. உன்னை கண்டது முதல் உன் விழிச்சிறையில் சிக்கி இருக்கும் என் இதயம் மட்டும்? ஆனாலும் என் இதயம் என்னை விட கொடுத்து வைத்தது தான். உன் இமைச்சாமரம் ஆவது கிடைக்கின்றது.

நீ என் தோள்களில் சாய்ந்த அந்த மாலை பொழுது, என் வாழ்க்கையே அழகாய் போனது. "இப்படியே செத்துடனும் போல இருக்குடா..." என்கிறாய் நீ. எனக்கோ இப்படியே வாழ்ந்திடனும் போல இருக்குதடி. உன்னை விட அழகான பெண்ணொருத்தியை வரம் கொடு தேவதையே.. உனக்கும் எனக்கும் மகளாய்.
யார்யாரோ
கவிதை எழுதிய
நிலவு கூட
அழகாய் போனதடி..
நீ அருகில்
இருக்கையில்..

எத்தனையோ
பெண் பார்த்து
வந்திடாத கனவுகளை
மொத்தமாய் கொண்டுவர
நின்னை
செய்தானோ மன்மதன்?

அழகாய்தானடி
இருக்கிறாய்..
எனக்கு பிடித்த
உடையில்..
உனக்கு பிடித்த
வெட்கத்தில்..
நமக்கு பிடித்த
காதலில்..
நீ.

என்னை
தேடி வதைக்கும்
தேவதைகளில்
நீ என் காதலி.


பி.கு: நான் கிறிஸ்துமஸ் லீவில் செல்வதால், இப்பதிவுக்கான மறுமொழி பதில்களையும், உங்கள் பதிவுகளையும், திரும்ப வந்து தான் பார்க்க இயலும். Happy Christmas.